பிட்புல், ராட்வீலர், டெரியர், மாஸ்டிஃப்ஸ், உள்ளிட்ட 23 வகை நாய் இனங்களுக்கு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக அதிகரித்து வரும் நாய்கள் தாக்குதல் சம்பவங்களை கருத்தில் கொண்டு, இந்தியாவில் ஆபத்தானதாகக் கருதப்படும் சில நாய் இனங்களின் இறக்குமதி, விற்பனை மற்றும் இனப்பெருக்கத்தை தடை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த தடைசெய்யப்பட்ட நாய் இனங்களில் பிட்புல், ராட்வீலர், டெரியர், மாஸ்டிஃப்ஸ், உள்ளிட்ட 23 வகை நாய் இனங்களும் அடங்கும். இந்த நாய் இனங்கள் ஆபத்தானவை மட்டுமல்ல, அவற்றின் தாக்குதல்களும் மனிதர்களின் மரணத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கால்நடை பராமரிப்பு துறை அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியது, அதில் உள்ளாட்சி அமைப்புகள் இந்த “தடைசெய்யப்பட்ட” நாய்களை விற்பனை செய்யவோ அல்லது இனப்பெருக்கம் செய்யவோ மக்களுக்கு உரிமம் அல்லது அனுமதி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே தடைசெய்யப்பட்ட இந்த நாய்களை வைத்திருக்கும் நபர்கள், அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடுக்க தங்கள் செல்லப்பிராணிகளை கருத்தடை செய்ய வேண்டும்.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக நிபுணர்கள் மற்றும் விலங்குகள் நலக் குழுக்கள் அடங்கிய குழு தங்களது அறிக்கையை சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் மற்ற பங்குதாரர்களுடன் விவாதித்து ஒருமனதாக முடிவெடுக்குமாறு மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
நாட்டில் நாய் இனங்கள் தடை செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. அமெரிக்காவில் உள்ள 20 மாநிலங்களில் பிட் புல்ஸ் தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல அதனுடைய இனப்பெருக்கங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்தியாவிலும் இந்த தடை உத்தரமானது பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.