கறிக்கோழி வளர்ப்பில் ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுவது நிரூபிக்கப்பட்டால், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில், 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் வளர்ச்சிக்கு எதிராக இணையத்தில் பலர், ஹார்மோன் கலந்த பிராய்லர் கோழி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற தகவல்கள் பொய்யானது என நிரூபிக்க கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தினர் புதிய முயற்சிகளை எடுத்துள்ளனர்.
கால்நடை மருத்துவர்கள் மற்றும் கோழிப்பண்ணை ஆராய்ச்சியாளர்களால் பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட போதிலும், ஹார்மோன் ஊசி தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்கள் உட்பட பரவலாக பரப்பப்படுகின்றன. பிராய்லர் கோழிகள் 35 முதல் 40 நாட்களில் இரண்டு கிலோ வரை வளரும்.
இது குறித்து பறவை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் சிறப்பு அதிகாரி எஸ்.ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: பிராய்லர் கோழிகளில் செயற்கை ஹார்மோன்கள் இருப்பதாக பரப்பப்படும் பிரச்சாரம் தவறானது. கோழிகளின் எடை அதிகரிப்பது மரபணு ரீதியாக உயர்ந்த இனங்களின் வளர்ச்சியின் காரணமாகும். சத்தான தீவனம், நோய்த்தடுப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு போன்ற காரணிகளும் உதவுகின்றன என்று கூறினார். ஹார்மோன்கள் பயன்படுத்துவதாக இருப்பது செய்தியில் உண்மைத் தன்மை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.