இந்த தலைமுறையினர் தொடர்ந்து தவறான பாதையில் பயணித்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது எங்கோ பாகிஸ்தானில் மட்டுமே நடந்த விஷயம் அல்ல. பல இடங்களில் அடுத்த தலைமுறை இப்படி சீரழிந்து வருகிறது. இது அவர்களின் தனிப்பட்ட குற்றமாகவும் கருத முடியவில்லை. சமூகம், பெற்றோர், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்படங்கள் என்று அவர்கள் வாழ்கிற, அவர்களை வழிப்படுத்துகிற நம் சமூகம் இப்படி தான் அவர்களுக்கு வழிகாட்டுகிறது என்பது தான் உண்மை.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் இரவு பார்ட்டி ஒன்றில், திடீரென நுழைந்த போலீசார், அங்கு நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பார்ட்டியில் 250 மாணவ, மாணவிகள் அரைகுறை ஆடைகளுடன் போதையில் தள்ளாடியபடி நடனமாடிக் கொண்டிருந்தனர். வெறும் சரக்கு பார்ட்டி மட்டும் கிடையாது. தடைச் செய்யப்பட்ட போதைப் பொருட்களையும் பயன்படுத்தியுள்ளனர். பார்ட்டி நடந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்களா ஒன்றில் பார்ட்டி நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி கிராமர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பார்ட்டியில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. பார்ட்டியை நடத்துவதற்கு போலீசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோரின் பிள்ளைகள் பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோவில் மதுபாட்டில்கள் அடுக்கி வைத்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக காவல்துறைக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரவு 11 மணிக்கு தொடங்கிய பார்ட்டி அதிகாலை வரை நடந்துள்ளது. காவல்துறையினர் அதிகாலை 4 மணிக்கு ரெய்டு நடத்த சென்ற போதும் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. பார்ட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால், அவர்கள் வீடியோவை வெளியிட்டது தவறு என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பங்களா உரிமையாளர் காலித் கான், தடை செய்யப்பட்ட பொருட்களை விநியோகம் செய்த அயன் கான் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.