நாட்டின் முன்னணி இணையவழி கல்வி நிறுவனமான பைஜூஸ், தனது வருவாயை பெருக்க 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.
சில மாதங்களாகவே முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிக்கு ஆட்கள் எடுப்பதை குறைத்துக் கொண்டுள்ளன. அத்துடன் உலகின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அதிர்ச்சி தகவல் கடந்த வாரம் வெளியானது. கோவிட், உக்ரைன் போர் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியானது சங்கிலி விளைவாக சர்வதேச நாடுகளை பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது. இதுவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாட்டின் முன்னணி இணையவழி கல்வி நிறுவனமான பைஜூஸ் (BYJU’S) தனது வருவாயை பெருக்க 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் கூறுகையில், ”2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வருவாய் அதிகரிப்பை மேற்கொண்டு லாபம் மிக்க நிறுவனமாக பைஜூஸ்-ஐ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆறு மாதத்திற்குள் 5 சதவீத ஊழியர்கள் அதாவது சுமார் 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் நிறுவனத்தில் போலியான ரோல்களில் உள்ளவர்கள், தனி நபரின் வேலை திறன், சீரான தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவை உறுதி செய்யப்படும்” என்றார்.

மேலும், புதிதாக 10,000 ஆசிரியர்களை எடுத்து நிறுவனத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதில், பாதிப்பேரை இந்தியாவில் இருந்து தான் வேலைக்கு எடுக்கவுள்ளோம்” என்றார். கடந்தாண்டில் சுமார் ரூ.4,588 கோடி நஷ்டத்தை கண்டதாக கூறிய பைஜூஸ் நிறுவனம், 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிதியாண்டின் முடிவில் ரூ.10,000 கோடி வருவாய் என்று தெரிவித்தது. அதேவேளை, இந்த காலகட்டத்தில் லாபம், நஷ்டம் குறித்து எந்த புள்ளி விவரத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிறுவனத்தில் சுமார் 50,000 பேர் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.