பாடகர், நடிகர், டப்பிங் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர் மனோ. 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் இவர் பாடாத படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு செம பிஸியான பாடகராக வலம் வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, துலு, அசாமிஸ் என பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இளையராஜாவின் மனம் கவர்ந்த பின்னணி பாடகர் ஆகவும் இருந்து வந்தார் மனோ. இளையராஜா இசையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.
டப்பிங் கலைஞராகவும் மனோ சிறந்து விளங்கியுள்ளார். குறிப்பாக தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் படங்களுக்கு மனோ தான் டப்பிங் செய்வார். இது தவிர தமிழ் தெலுங்கில் படங்களிலும் நடித்திருக்கிறார். இசைத்துறையில் 38 ஆண்டுகளில் 15 மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களை பாடி அசத்திய மனோவுக்கு தற்போது டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ரிச் மான்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாடகர் மனோவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.