கொலம்பியா நாட்டில் ஆவிகளை தொடர்பு கொண்டு பேசும் ஓய்ஜா பலகையை வைத்து விளையாடிய 28 மாணவிகளுக்கு வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற உடல் பாதைகள் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவின் க்ளெரஸ் நகரில் அமைந்துள்ள க்ளெரஸ் எஜுகேஷன் இன்ஸ்டிட்யூட் என்னும் பள்ளியில் தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தப் பள்ளியில் கல்வி பயின்று வரும் மாணவிகள் ஆவிகளை தொடர்பு கொண்டு பேசும் ஓய்ஜா பலகைகளை வைத்து விளையாடியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகளுக்கு தொடர்ச்சியாக வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக உடனடியாக அந்த மாணவிகளை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது பள்ளி நிர்வாகம். தற்போது அந்த மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பள்ளியின் முதல்வர் ஹியூகோ டோரஸ் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மாணவிகளின் உடல்நிலை குறித்து கேட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். ஆவிகளை தொடர்பு கொள்ளும் பலகையை வைத்து விளையாடி 28 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் கொலம்பியா மட்டுமல்லாமல் உலகையும் அதிரச் செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருவதாக கொலம்பியா காவல்துறையும் அறிவித்துள்ளது.