நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 சவரன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி கிராமத்தில் பல்லவன் கிராம வங்கி அருகே லோகநாதன் என்பவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நகைக்கடை ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். இக்கடையில் பணியாளர்களை கொண்டு கடை நடத்தி வரும் இவர், நேற்று வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்ட கடையை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்றிரவு பல்லவன் கிராம வங்கியின் சிசிடிவி கேமராக்களை துண்டித்தும் நகைக்கடையின் முன்பு வைக்கப்பட்டுள்ள கேமராக்களை திருப்பி வைத்தும், கடையின் பூட்டை பிளேடால் அறுத்து உடைத்து உள்ளே சென்று கடையில் அலங்கரிக்கப்பட்ட வகையில், வைக்கப்பட்டிருந்த நகை ட்ரேக்களை நகையுடன் எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவற்றை அருகே இருந்த மக்காசோள காட்டினுள் சாவகாசமாக அமர்ந்து மது அருந்தி விட்டு நகைகளை பிரித்து எடுத்துச் சென்று தப்பியோடி உள்ளனர்.

நகைக்கடையில் பூட்டு உடைக்கப்பட்டதாக உரிமையாளருக்கு காலை தகவல் கிடைத்ததன் அடிப்படையில் கடைக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த 281 சவரன் நகை, 30 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை களவாடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து பரஞ்சனம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி பகலவன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்து வருவதோடு, சிசிடிவி காட்சிகளையும் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .