மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 10 மாடி கொண்ட சரவணா ஸ்டோர்ஸ் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கடையின் 9-வது தளத்தில் உணவகம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கிருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால் கடை ஊழியர்களும், கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பொதுமக்களும் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். அப்போது வெளியேறிய கரும்புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் மாட்டுத்தாவணி பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், 2-வது நாளான் இன்று காலை மீண்டும் கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து 2-வது நாளாக கரும்புகை வெளியேறியதால் சுற்று வட்டார மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.