தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கலைக்கல்லூரிகளில் சேர 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். மாநிலம் முழுவதும் 163 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. இது தவிர தனியார் கலைக்கல்லூரிகளும் உள்ளன. கடந்த 22ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், முன்பு போல் விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கும் நடைமுறை இப்போது கிடையாது. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் கலைக்கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக போட்டித் தேர்வுகள் எழுதி வேலைவாய்ப்பை பெறுவதற்காக பி.காம். பாட பிரிவை தேர்வு செய்வதில் மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அரசு கல்லூரிகளை பொறுத்தவரை பொறியியல் மாணவர் சேர்க்கையை போல் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தனியார் கல்லூரிகளில் பி.காம்., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ. பாட பிரிவுகளுக்கு ஏராளமானவர்கள் மோதுகிறார்கள். இதை சாதகமாக்கி பி.காம் படிப்பில் சேர ரூ.5 லட்சம் வரை சில கல்லூரிகளில் நன்கொடையும் வசூலிக்கப்படுகிறது.