இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வருவதால் ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ , ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ போன்ற விழிப்புணர்வுகள் இங்கு நடைபெற்று வருகின்றன. ஆனால் பல நாடுகளில் குழந்தை பிறப்பை அரசுகள் ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக ஜப்பானில் மக்கள் தொகைப் பெருக்கத்தை அதிகரிக்க அந்நாடு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது.
ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. அதே சமயம் இறப்புகள் அதிகம் இருப்பதால் அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு அந்நாட்டில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 604 குழந்தைகள் பிறந்துள்ளதாக பதிவாகியுள்ளது, ஆனால் 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 இறப்புகளும் பதிவாகின. இந்நிலையில் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது.
அதன் படி குழந்தை பிறந்த பிறகு, தம்பதிக்கு 4,20,000யென் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம்) வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மானியத்தை 80 ஆயிரம் யென் (சுமார் ரூ. 49 ஆயிரம்) உயர்த்தி மொத்தம் 5 லட்சம் யென் (இந்திய ரூபாய் மதிப்பில் 3 லட்சம்) ஆக வழங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் 2023-ஆம் நிதியாண்டு முதல் அமல்படுத்த ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.