மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சலைட்டுகள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். நக்சலைட்களின் பெரிமிலி தலத்தைச் சேர்ந்த சிலர் , பாம்ரகட் தாலுகாவில் உள்ள கத்ரங்காட்டா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில், தந்திரோபாய எதிர் தாக்குதல் பிரச்சாரத்தின் (டி.சி.ஓ.சி.) காலத்தில் நாசகார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தில் முகாமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.
கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான C-60 கமாண்டோக்களின் இரண்டு பிரிவுகள் உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்றனர், குழுக்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், அதற்கு சி -60 வீரர்கள் பதிலடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதை அடுத்து, அந்த இடத்தில் இருந்து ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் ஒருவர் பெரிமிலி தளத்தின் பொறுப்பாளரும் தளபதியுமான வாசு என அடையாளம் காணப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். அந்த இடத்தில் ஏகே 47 ரக துப்பாக்கி, கார்பைன், இன்சாஸ் துப்பாக்கி, நக்சல் இலக்கியம் மற்றும் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.