கேரளாவில் நேற்று ஒரே நாளில் 292 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்புடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது 2,041 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மட்டும் கொரோனாவுக்கு இதுவரை 72,056 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் ஜேஎன்1 கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தலைமையில் இணை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.