மகாராஷ்டிர மாநிலம் மும்பை குர்லா பகுதியில் வசிக்கும் 42 வயது பெண் ஒருவர், கடந்த மாதம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேர், கத்தியைக் காட்டி மிரட்டி, தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்து, சிகரெட்டால் தனது பிறப்புறுப்பில் சூடுவைத்ததாக தெரிவித்திருந்தார். அதோடு புகார் அளித்த பெண் 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகள் 3 பேரில் பப்லு மொகமத் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டு கடந்த 40 நாட்களாக சிறையில் இருக்கிறார். இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் பெண் கொடுத்திருப்பது போலிப் புகார் என்று தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், ”புகார் கொடுத்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இதை உறுதி செய்ய 2 மருத்துவமனையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அதோடு அவரின் உடம்பில் இருக்கும் காயங்கள் அவராகவே உருவாக்கிக் கொண்டவை என்றும் தெரியவந்துள்ளது. தடயவியல் ஆய்வு முடிவுகளும் குற்றச்சாட்டுக்குச் சாதகமாக இல்லை. விசாரணையில் 4 பேரும் கூட்டாக போதைப்பொருள் வியாபாரம் செய்துள்ளனர். அவர்களுக்குள் வியாபார பிரச்சனை ஏற்பட்டதால் அவர்களைப் பழி வாங்கும் நோக்கத்தில் 3 பேர் மீதும் அந்த பெண் போலியாகப் புகார் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக விரிவான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.