இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கலவரம் வெடித்ததை அடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் பட்டியலின அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி மே 3ஆம் தேதி மைதேயி சமுக மாணவர் சங்கம் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி வன்முறையாக வெடித்தது. இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக ராணுவம், ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வர வரவழைக்கப்பட்டனர். வன்முறை கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மணிப்பூருக்கு நேரடியாக சென்று களஆய்வு நடத்தினார். இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மணிப்பூர் அரசு, தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறையில் தாய் மகன் உட்பட 3 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதாக வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலவரத்தில் படுகாயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் இன்னொரு உறவினர் மூவரும் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த ஆம்புலன்ஸை திடீரென வழிமறித்த ஒரு கும்பல் அவர்களிடம் விசாரணை நடத்தியது.
ஆம்புலன்சில் இருந்தவர்கள் எத்தனை முறை கெஞ்சியும் அந்த மர்ம கும்பல் ஆம்புலன்சுக்கு தீவைத்தது. இந்த கொடூர தீவிபத்தில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடந்து கொண்டிருப்பதால் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 1000 வீரர்கள் விமானம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் ஏற்கனவே 20,000-க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.