சென்னை ஷெனாய் நகரில், ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியின் 3 வயதான குழந்தை, அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி, இவர்களின் குழந்தை வழக்கம் போல் பள்ளி முடிந்து வேனில் வீட்டிற்க்குள் திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் வேலை செய்து வந்த பணிப் பெண்ணான 25 வயது அம்பிகா, அவரது நண்பரான 30 வயது கலிமுல்லா சேட் என்பவருடன் சேர்ந்து குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.
மேலும், ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் தான் குழந்தையை விடுவோம் என்று அந்த தம்பதியை மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது தொடர்பாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையை தேடி வந்தனர். அப்போது அந்த குழந்தை, கேளம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும், குழந்தையை கடத்திய பணிப்பெண் அம்பிகா மற்றும் அவரது நண்பரான கலிமுல்லா சேட் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, அல்லிக்குளத்தில் உள்ள சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மேலும், இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன்பாக நடந்து வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் குழந்தையைக் கடத்திய குற்றத்துக்காக அம்பிகா மற்றும் கலிமுல்லா சேட் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.