மதுரை மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி மூடப்படாமல் இருந்துள்ளது. இதில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையின் கூக்குரலை கேட்டு அங்கு வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தையை மழலையர் பள்ளியில் விட்டுவிட்டு, பெற்றோர் வழக்கம்போல வேலைக்குச் சென்றுள்ளனர்.
பள்ளியில் விடப்பட்ட குழந்தை உயிரிழந்ததை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். பள்ளி தரப்பில் இருந்து இதுவரை யாரும் என்னிடம் பேசவில்லை என சிறுமியின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை யாரும் வந்து நேரில் பார்க்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், 3 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சம்பவ இடத்தில் கோட்டாட்சியர் ஷாலினி விசாரணை நடத்தி வருகிறார். பள்ளியின் உரிமையாளர், 6 ஆசிரியர்கள், பள்ளி உதவியாளர் என 8 பேரை பிடித்து மதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.