18 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்கூட்டர் மற்றும் கார் ஓட்டுவதற்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
சிறுவயது பிள்ளைகள் ஸ்கூட்டர் அல்லது கார் ஓட்டும் காட்சிகளைப் பரவலாகக் காணமுடிகிறது. இதனை தடுக்க 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை ஸ்கூட்டர் அல்லது கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை உத்தரப்பிரதேச போக்குவரத்து ஆணையர் சந்திர பூஷன் சிங் வழங்கியுள்ளார். அதோடு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குறித்து பிரசாரம் மேற்கொள்ள இடைநிலைக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார். பள்ளியில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களின் போது மாணவர்கள் சாலைப் பாதுகாப்பு குறித்த தகவல்களைப் பெற்று, அவற்றைக் கடைப்பிடிக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். பாதுகாப்பு விதிகளை சித்தரிக்கும் விதமாக பள்ளி சுவர்களில் ஓவியங்கள் வரையப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு செய்தி தொடர்பாளர் கூறுகையில், ”18 வயதுக்குட்பட்டவர்கள் எந்த மோட்டார் வாகனத்தையும் இயக்காமல் இருப்பதை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் இந்த முயற்சியை ஆதரிக்க ஒவ்வொரு பள்ளியிலும் `சாலை பாதுபாப்பு கிளப்’ (Road Safety Club) தொடங்கப்படும். இந்த கிளப்பிற்கு ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டு சாலை பாதுகாப்பு கேப்டனாக நியமனம் செய்யப்படுவர். அதேபோல ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஓர் ஆசிரியர் நோடல் தலைவராக நியமிக்கப்படுவார். இவர்கள் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயிற்சிகளை பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.