ஏற்காடு மலை அடிவார சோதனைச் சாவடியில் போலீஸ் ஆய்வு செய்த பின்னரே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
ஏற்காட்டில் இருந்து சேலம் வந்த தனியார் பேருந்து 11-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், 34 பேர் படுகாயமடைந்தனர். கோடை விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்காட்டுக்கு செல்லும் பேருந்துகளில் அதிகளவில் பயணிகள் சென்று வருகின்றனர்.
நேற்று மாலை ஏற்காட்டிலிருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். 11-வது கொண்டு ஊசி வளைவு அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. 10-வது கொண்டை ஊசி வளைவு அருகே விழுந்து கிடந்த பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாட்டுகளில் சிக்கி கூச்சலிட்டனர். அந்த வழியே சென்றவர்கள், ஏற்காடு போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பேருந்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்காடு மலை அடிவார சோதனைச் சாவடியில் போலீஸ் ஆய்வு செய்த பின்னரே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது; மலைப் பகுதியில் 30 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்காடு மலை அடிவார சோதனைச் சாவடியில் போலீஸ் ஆய்வு செய்த பின்னரே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப் பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.