உலகிலேயே ஆகச்சிறந்த கலைவேலைப்பாடுகளுடன் அயோத்தி ராமர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வெட்டி எடுக்கப்பட்ட பாறை, அயோத்தி கருவறைக்குள் நுழைந்ததன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
அயோத்தி ராமர் கோயிலில் வைக்கப்பட்ட குழந்தை ராமர் சிலையின் புகைப்படம் வெளியான போதே அனைவரையும் கவர்ந்து இழுத்துவிட்டது. ராமர், குழந்தையில் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்கிற அளவுக்கு, மிகவும் தத்ரூபமாக சிலை உருவாக்கப்பட்டிருந்ததுதான் அதற்கு காரணம். உண்மையில், 5 வயது பாலகனாக ராமரை நினைவுக்கூறும் வகையில், வெவ்வேறு இடங்களில் 3 சிலைகள் உருவாக்கப்பட்டன.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த அருண் யோகிராஜ், பெங்களூருவைச் சேர்ந்த கணேஷ் பட் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த சத்யநாராயண் ஆகியோர் தனித்தனியாக சிலைகளை உருவாக்கினர். கர்நாடகாவில் உருவான 2 சிலைகளும் கருங்கல்லில் ஆனது. ராஜஸ்தானில் மார்பிள் கல்லை பயன்படுத்தி சிலை உருவாக்கப்பட்டது. இறுதியில் மைசூரில் உருவான சிலைதான் அயோத்தி கோயிலின் கருவறையில் வைக்க தேர்வு செய்யப்பட்டது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் கடவுள் சிலைகளுக்கு நெல்லிக்கரு பாறைகளே பயன்படுத்தப்படுகின்றன. அதன் கருநீல நிறம் கிருஷ்ணரை நினைவூட்டுவதுடன், சூரிய ஒளியில் மின்னுவதால், கிருஷ்ண ஷிலா என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், மைசூரு மாவட்ட குவாரியில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட 10 டன் எடைக் கொண்ட, 300 கோடி ஆண்டுகள் பழமையான ஒற்றை பாறையை வல்லுநர்கள் தேர்வு செய்தனர். அந்த பாறையில் தான், குழந்தை ராமர் சிலை. புகழ்பெற்ற கலைஞரான வாசுதேயோ காமத்தின் ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு சிலை செதுக்கப்பட்டது. உலகில் ராமரை கண்முன் நிறுத்தும் சிலைகளிலேயே மிகவும் கலை நுணுக்கத்தோடும் அவதாரங்களை உள்ளடக்கியும் செதுக்கப்பட்டது இதுதான் முதல் முறை எனப்படுகிறது.
சிலையை கூர்ந்து பார்ப்போருக்கு, சிலையின் இருப்பக்கத்திலும் மேல்புற வளைவில் பரசுராமர், ராமர், கிருஷ்ணர், கல்கி, வாமன, நரசிம்ம, கூர்ம, வராக, மச்ச, பலராம என கிருஷ்ணரின் 10 அவதாரங்களும் புலப்படும். சிலையின் வலது பக்கத்தில் ஹனுமனும், இடதுபக்கத்தில் விஷ்ணுவின் வாகனமான கருடனும் அமைந்துள்ளது. அதனுடன், சுவஸ்திக் மற்றும் ஓம் அடையாளம், கதாயுதம், சக்கரம், சங்கு உள்ளிட்ட பல்வேறு அடையாளங்களோடு, இடது கையில் வில் அம்பு தாங்கி, வலது கரத்தால் ஆசிர்வதித்தபடி தாமரை பீடத்தில் பக்தர்கள் மனதை கொள்ளை கொண்டபடி குழந்தை ராமர் காட்சியளிக்கிறார்.