மத்திய அரசின் சோலார் மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2024-2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், இதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தனது பட்ஜெட் உரையின் போது பல பெரிய திட்டங்கள் மற்றும் புதிய வசதிகளை மேம்படுத்துவது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, மின்சார பயன்பாட்டில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய வீடுகளின் மேற்கூரையில் சோலார் மின் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததை நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி தொகுப்பை வழங்கும் இந்த திட்டம் இந்த ஆண்டு ஒரு கோடி வீடுகளில் செயல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன் மூலம் ஒரு வீட்டுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என குறிப்பிட்டார். வீட்டின் சோலார் மின்சார பயன்பாட்டின் மூலம் சேமிக்கும் பணம் மற்றும் எஞ்சிய மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் என இந்த திட்டத்தில் பயனடைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை செலவு மீதமாகும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.