லிவ் இன் முறையில் உடன் வாழ்ந்த காதலியை கொலை செய்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் டெல்லியை அதிரவைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த வாலிபர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர், மும்பையில் கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அங்கு உடன் பணிபுரியும் ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்த நிலையில், இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இருவரின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், ஷ்ரத்தா – அஃப்தப் இருவரும் டெல்லிக்கு குடிபெயர்ந்து அங்குள்ள மெஹ்ராலி என்ற பகுதியில் வீடு எடுத்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

டெல்லி சென்றதும் ஷ்ரத்தா தனது பெற்றோருடன் தொடர்பு கொள்வதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளார். பெற்றோர் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அது நடக்காத நிலையில், சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் ஷ்ரத்தா டெல்லியில் வசிப்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் மதன் டெல்லி சென்று தனது மகள் வசிக்கும் வீட்டை ஒரு வழியாக தேடி கண்டுபிடித்துள்ளார். அங்கு பார்த்தால் வீடு பூட்டியிருந்தது. இதனால் தனது பெண்ணை காணவில்லை என்று தந்தை விகாஸ் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உடனடியாக காவல்துறை அஃப்தப்பை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி ஷ்ரத்தா அஃப்தப்பை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அதற்கு அஃப்தப் சம்மதிக்காத நிலையில், இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அப்படி தான் கடந்த மே 18ஆம் தேதி சண்டையில் அஃப்தப் ஷ்ரத்தாவை தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்கள் பிரிட்ஜில் வைத்து டெல்லியில் ஒவ்வொரு பகுதிகளிலும் வீசி எறிந்துள்ளார். இந்த வாக்குமூலத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த டெல்லி போலீசார், அஃப்தப் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.