தாழ்த்தப்பட்ட சிறுமியை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தாழ்த்தப்பட்ட சிறுமி 3 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அஜ்மீரைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது நண்பருடன் சொந்த ஊரிலிருந்து கிளம்பி ஜோத்பூர் வரை பேருந்தில் பயணித்துள்ளார். நள்ளிரவானதால் அங்கேயே தங்குவதற்கு இடம் கிடைக்காத நிலையில், சாலையில் நடந்து கொண்டிருந்தனர்.
அப்போது இளைஞர்கள் சிலர் அவர்களை அணுகி தாங்கள் உதவி செய்வதாகவும், தங்களோடு வரும்படியும் அழைத்துள்ளனர். உணவு சாப்பிட்டுவிட்டு ரயில் வழியாக பயணத்தை தொடரலாம் ரயில் நிலையத்தை காண்பிக்கிறோம் என அழைத்துள்ளனர். இவர்களை நம்பி அந்த சிறுமியும் சிறுவனும் அவர்களோடு சென்றுள்ளனர். ரயில் நிலையத்திற்கு நடந்தே அவர்களை அழைத்துச் சென்ற அந்த கும்பல் அதிகாலை 4 மணியளவில் பல்கலைக்கழக வளாகம் அருகில் வந்ததும் அவர்களை தாக்கி உடைந்த சுவற்றின் வழியே அவர்களை இழுத்துச் சென்றனர். பின்னர் சிறுவனை தாக்கி வாயில் துணியை கட்டி 3 பேரும் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் காலை 5 மணியளவில் நடைபயிற்சிக்கு செல்பவர்கள் அந்த பகுதிக்கு வரத் தொடங்கியதும் அந்த மூவரும் தப்பித்து ஓடியுள்ளனர். இதனையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட சமந்தர் சிங் (21), பட்டம் சிங் (22) மற்றும் தர்மபால் சிங் (21) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிறுவன் மற்றும் சிறுமி ஆகியோர் காவல்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுமி வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாகவும், போலீசார் அவரைக் கைது செய்ய சென்றபோது, மற்ற இரண்டு குற்றவாளிகளையும் கண்டுபிடித்தாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.