சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கல்வடங்கம் காவிரியாற்றில் குளிப்பதற்காக எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 10 பேர் இன்று காலை வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, அதில் 4 மாணவர்கள் மட்டும் திடீரென நீரில் மூழ்கினர். இதையடுத்து, பதறிப்போன சக மாணவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஆற்றில் மூழ்கிய 2 மாணவர்களின் உடல்களை மீட்டனர். மற்ற இருவரின் உடல்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவர்கள் 10 பேரும் வீட்டில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, கல்வடங்கம் வந்துள்ளனர். இங்கு குளித்துக் கொண்டிருந்தபோதுதான் நிலைதடுமாறி பாண்டியராஜன், மணிகண்டன், முத்துசாமி மற்றும் கன்னந்தேரியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 கல்லூரி மாணவர்களும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மற்ற மாணவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.