கடலூர் அருகே குடும்பத்தகராறில் 2 கைக்குழந்தைகள் உள்பட 4 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் செல்லாங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் பகுதியில் பிரகாஷ் – தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஷாசினி என்ற 8 மாத குழந்தை உள்ளது. இந்தநிலையில், தமிழரசியின் அக்காவான தனலட்சுமி குடும்ப தகராறு காரணமாக கணவரை விட்டு பிரிந்து, தனது 4 மாத குழந்தையுடன் தமிழரசி வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, சேர்ந்து வாழ வருமாறு தனலட்சுமியிடம் அவரது கணவர் சமாதானம் பேசியுள்ளார். அப்போது, இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சற்குரு தான் கொண்டு வந்த பெட்ரோலை மனைவி தனலட்சுமி மற்றும் அவரது 4 மாத குழந்தை மீது ஊற்றியுள்ளார். மேலும், இதனை தடுக்க சென்றபோது தனலட்சுமியின் தங்கை தமிழரசி மற்றும் அவரது 8 மாத குழந்தை ஹாசினி மீதும் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. பின்னர் சர்குருவும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் சற்குரு, தனலட்சுமி, 8 மாத கைக்குழந்தை மற்றும் 4 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த தமிழரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.