25 வயது இளம்பெண்ணை ரூமுக்குள் அடைத்து வைத்து 4 பேர் கொண்ட கும்பல் 3 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். விஜயவாடா பெங்கி சர்க்கிளில் ஒரு புகழ்பெற்ற ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது. இந்த ஷாப்பிங் மாலில் அந்த இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவருக்கு 25 வயதுடைய இளைஞர் ஒருவரின் அறிமுகம் கிடைத்ததுள்ளது. அதன்பின்னர், அடிக்கடி இந்த ஷாப்பிங் மாலுக்கு அந்த இளைஞர் வந்துபோக ஆரம்பித்தார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணிடம் நைசாக பேசிய இளைஞர், அவரை கானூர் சனத் நகரில் உள்ள தன்னுடைய ரூமுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ரூமுக்குள் நுழைந்ததுமே, அந்த பெண்ணுக்கு மது கலந்து தந்திருக்கிறார். அந்த பெண்ணும் அதை வாங்கி குடித்துள்ளார்.

சிறிது நேரத்தில், இளைஞர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கு தொடர்பு கொண்டு ரூமுக்கு வரவழைத்தார். பிறகு 4 பேரும் சேர்ந்து மாறி மாறி அந்த இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமல்ல, அந்த பெண்ணை அதற்கு பிறகு வெளியே விடவில்லை. இப்படியே 3 நாட்கள் அதே ரூமில் அடைத்து வைத்து, வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதனால் 4-வது நாளில் அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட துவங்கியது. இதைப்பார்த்து பதறிப்போன 4 பேரும், அந்த பெண்ணை தூக்கி வந்து அங்குள்ள சாலையோரம் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

பிறகு அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரம் இளம்பெண் குற்றுயிரும் குலையுயிருமாக விழுந்து கிடப்பதை பார்த்து பதறிப்போய், பெனுமனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரது நிலைமை மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். ஆனால், அதற்குள் 4 பேருமே எஸ்கேப் ஆகி உள்ளனர். அந்த பெண் வேலை பார்க்கும் ஷாப்பிங் மாலில் உள்ள கேமராவை ஆராயும் பணி நடந்து வருகிறது. அங்கு வந்த இளைஞரின் அடையாளம் தெரிந்தால்தான், மற்ற 3 பேரையும் பிடிக்க முடியும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட பெண் யார்? அவரது குடும்ப விவரங்கள் அனைத்தையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் விஜயவாடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.