பொங்கலுக்கு முன் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விவசாய பயன்பாட்டிற்காக கடந்த மாதம் 50,000 இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதில், தற்போது 34 ஆயிரத்து 134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிடும். ஒன்றரை ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்பு நிறைவு பெற போகிறது” என்றார்.
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு
’இதுவரை 1 கோடியே 20 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் 2.67 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும். இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ’அண்ணாமலை தான் வாங்கிய கைக் கடிகாரத்திற்கான ரசீதை இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும். அண்ணாமலை வாங்கிய கைக் கடிகாரத்திற்கு ரசீது இருந்தால், வெளியிட வேண்டியதுதானே’ எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி சாடியுள்ளார்.