Bomb Threat: விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் குறித்து இன்டர்போல் உதவியை இந்திய விமானத்துறை நாடியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால், விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டு பின்னர், அது வதந்தி என தெரிய வருகிறது. நேற்றைய தினம் கூட, இ-மெயில் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும், விமான சேவைகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது.
கடந்த 2 வாரத்தில் மட்டும், உள்நாடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்கு 410 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சமூகவலைதள நிறுவனங்களையும் ஒன்றிய அரசு கண்டித்திருந்தது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வெளியான பதிவுகளை 72 மணிநேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும், அதை செய்யத் தவறும் பட்சத்தில், ஐ.டி., சட்ட விதிகளின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.
அதேவேளையில், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன், நவம்பர் 1 முதல் 19ம் தேதி வரையில் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால், விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்களுக்கும், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு உதவுமாறு சர்வதேச குற்ற விசாரணை அமைப்பான இன்டர்போலின் உதவியை இந்தியா நாடியுள்ளது. அதேபோல, அமெரிக்காவின் விசாரணை அமைப்பான எப்.பி.ஐ.,யிடமும் (FBI) இந்தியா உதவி கேட்டுள்ளது. அதனையேற்று, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் அலைபேசி மற்றும் இ-மெயில் முகவரி குறித்த தகவல்களை திரட்டிக் கொடுக்க எப்.பி.ஐ., சம்மதித்துள்ளது.
Readmore: ஷாக்!. டெல்லியின் காற்றை சுவாசிப்பது தினமும் 40 சிகரெட்களை புகைப்பதற்கு சமம்!. ஆய்வில் தகவல்!