திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோவூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்றும் அந்த சிறுமி மாடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள், சிறுமியை மிரட்டி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியே சொன்னால் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை ஊடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, சிறுமியின் உடல் நிலை சீரானதை அடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில், திடீரென அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.