கனியாமூர் மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேரும் ஜாமீனில் விடுவிக்கக் கோரி விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாகப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சேலம் மத்தியச் சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து நேற்றைய தினம் 5 பேரிடமும் 12 மணி நேரம் விசாரணை செய்து, நள்ளிரவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஜாமீனில் விடுவிக்க கோரி அவர்களது வழக்கறிஞர் ராமச்சந்திரன் விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சாந்தி, ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளையை மேற்கொள்ள உள்ளார். சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பள்ளியின் முதல்வர் சிவசங்கரனுக்கு நரம்பியல் பாதிப்புக்குச் சிகிச்சை பெற வேண்டியுள்ளதாகக் கூறி ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் சீனிவாசன் மனுத் தாக்கல் செய்த போது அவரது மனுவைத் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.