டீசல் தட்டுப்பாடு எதிரொலி காரணமாக கேரள மாநிலத்தில் 50 சதவீத பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தின் தினசரி வருவாய் ரூ.6.5 கோடி. இதில், டீசல் செலவு ரூ.3.5 கோடி. இதனை எண்ணெய் நிறுவனங்களுக்கு போக்குவரத்துக் கழகம் வழங்கினாலும் கட்டண பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், கேரள அரசு போக்குவரத்துக் கழகம், எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டண பாக்கி ரூ.135 கோடியாக உயர்ந்து உள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் டீசல் வழங்குவதை நிறுத்தி விட்டன. எனவே போக்குவரத்துக் கழகம் தற்போது, தினமும் பணம் செலுத்தி டீசல் கொள்முதல் செய்து வருகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.) நிலுவையில் உள்ள ரூ.123 கோடி மற்றும் வட்டி உட்பட முந்தைய பாக்கியான ரூ.139 கோடியை தீர்க்காமல் டீசல் வழங்க மறுத்துவிட்டது.

இதனால், கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தனது சேவைகளை குறைத்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக நீண்ட தூர சேவைகள் மற்றும் 50 சதவீத சாதாரண சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமைக்கான எரிபொருளைச் சேமிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. டீசல் தேவைக்காக 10 மாவட்டங்களில் சாதாரண சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், மாநிலத்தின் பல பகுதிகளில் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால், வட்ட கொட்டாரக்கரை பேருந்து நிலையத்திற்குள் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போக்குவரத்துக் கழகம் சார்பில் மழை மற்றும் விடுமுறை காரணமாகவே சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.