fbpx

மாணவர்களுக்கு அதிர்ச்சி…! அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு…!

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான தேர்வுக்கட்டணம் 50% உயர்வை திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின்  தேர்வுக் கட்டணம், பட்டச்சான்றிதழ் கட்டணம், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், ஆய்வறிக்கைக் கட்டணம் ஆகியவற்றை 50% உயர்த்தி அண்ணா பல்கலைக் கழகம் ஆணையிட்டுள்ளது.  ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களை பாதிக்கும் வகையிலான இந்தக் கட்டண உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  இளநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.150லிருந்து ரூ.225 ஆகவும், முதுநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.450லிருந்து 650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர ஆய்வறிக்கை கட்டணம் இளநிலை மாணவர்களுக்கு 300 ரூபாயிலிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டச் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  சான்றிதழ்களை டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்வதற்கான கட்டணமும் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இது வரலாறு காணாத கட்டண உயர்வு. இந்தக் கட்டண உயர்வை மாணவர்களால் சமாளிக்க முடியாது.

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களின் நடைமுறைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில்,அதற்கேற்றவாறு பல்கலைக்கழகங்களின் வருவாயை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.  ஆராய்ச்சிகளை அதிகரிப்பது, புதிய கண்டுபிடிப்புகளை  அறிவுசார் சொத்துரிமை அமைப்புகளில் பதிவு செய்து, அவற்றை பயன்படுத்துவோரிடமிருந்து காப்புரிமைக் கட்டணம் பெறுவது போன்றவற்றின் மூலமாகவே பல்கலைக்கழகங்களின் வருவாயை உயர்த்த வேண்டும். தேர்வுக் கட்டணங்களை லாபநோக்கத்துடன்  உயர்த்துவது நியாயமில்லை.

இளநிலை பொறியியல் பயிலும் மாணவர்கள் பருவத்துக்கு 9 தேர்வுகள் எழுத வேண்டும். ஒரு தாளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.75 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாணவரும் பருவத்திற்கு ரூ. 675,  ஆண்டுக்கு ரூ.1350 கூடுதலாக செலுத்த வேண்டும். ஆண்டுக்கு தேர்வுக் கட்டணமாக மட்டும்  ரூ.4050 செலுத்துவது என்பது பெரும் சுமையாகும்.  தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஓராண்டில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் வீதம் 4 ஆண்டுகளில் மொத்தம் 6 லட்சம் மாணவர்கள் இளநிலை பொறியியல் படிக்கின்றனர். இவர்கள் மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான கட்டண உயர்வை கணக்கில் கொண்டால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.525 கோடி கூடுதலாகக் கிடைக்கும். இது பகல் கொள்ளையாகவே பார்க்கப்படும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே  அண்ணா  பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியது. அதற்கு பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட்டது.  கடந்த ஆண்டில் தவறு என்று திரும்பப் பெறப்பட்ட கட்டண உயர்வை நடப்பாண்டில் செயல்படுத்துவது எந்த வகையில் நியாயம்?  அதுவும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் இல்லாத நிலையில் இந்த முடிவை யார் எடுத்தது? மாணவர்களின் பொருளாதார நிலையையும், நலனையும் கருத்தில் கொண்டு  தேர்வுக் கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

English Summary

50% hike in Anna University exam fee

Vignesh

Next Post

மகளிர் உரிமைத் தொகை பணத்துக்கு கூடுதல் வட்டி..!! அரசின் இந்த திட்டம் பற்றித் தெரியுமா..?

Sun Aug 25 , 2024
1000 rupees per month is given to heads of households due to the Women's Rights Scheme. As a result, the co-operative banks are getting Rs.82 crore as interest-free recurring income every month.

You May Like