சுவிட்சர்லாந்து என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது பனி போர்த்த இயற்கையின் அழகு தான். சிலர் சினிமா பாடலில் வரும் சுவிட்சர்லாந்தின் மலைகளின் காட்சிகளைப் பார்த்துக் கண்டிப்பாக ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று நினைப்பர். அவ்வளவு இயற்கை நிறைந்த சுவிட்சர்லாந்தின் ஒரு கிராமத்தில் வந்து வாழ அரசே ரூ.50 லட்சம் வழங்குகிறது. வாலிஸ் மாகாணம் பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து 4,265 அடி உயரத்தில் அமைந்துள்ளது அல்பினென் என்ற கிராமம். இந்த கிராமத்தில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. அதனைச் சரிசெய்வதற்காக அரசு எடுத்துள்ள முடிவு தான் ரூ. 50 லட்சம் ஆஃபர். ஆனால், அதற்கு விதிமுறைகளும் உள்ளது.
2018இல் இந்த திட்டத்தை அரசு அந்த குறிப்பிட்ட கிராமத்திற்கு அறிவித்துள்ளது. ஒரு குடும்பமாகக் கிராமத்தில் குடியேறினால் ரூ.50 லட்சம் வழங்கப்படும். அதில் 4 நான்கு பெரியவர்களுக்கு ரூ.22 .5 லட்சம் வழங்கப்படும். குழந்தைகளுக்கு ரூ.9 லட்சம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் C குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதைத் தவிர, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பியச் சுதந்திர வர்த்தக சங்க உறுப்பினர் நாடுகளில் இருப்பவர்கள், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இருப்பவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள். அவர்கள் சுமார் 5 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் இருந்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் குடியேற 45 வயதிற்குக் குறைவானவராக இருக்க வேண்டும். அல்பினென் கிராமத்தில் ரூ.1.8 கோடி மதிப்பிலான வீட்டில் குடியேற வேண்டும். அதுவும் கண்டிப்பாக 10 ஆண்டுகள் அங்கு இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுக் குடியேறினால் ரூ. 50 லட்சம் வழங்கப்படும். இடையில் விதிமுறைகளை மீறினால், வாங்கிய 50 லட்சத்தை மீண்டும் அரசுக்குக் கொடுக்க வேண்டும்.