உலகக்கோப்பை 2023 தொடரில் விளையாடும் பத்தாவது அணியாக நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் மீதமுள்ள 2 அணிகளுக்காக ஜிம்பாப்வேயில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளின் அடிப்படையில் நெதர்லாந்து அணி இறுதி அணியாக தகுதி பெற்றுள்ளது. தகுதிச்சுற்று போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 6 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே வெளியேறியதால், நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்கு வாய்ப்புகள் பிரகாசமாகின.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. மேலும் நெதர்லாந்து அணி தகுதி பெற போட்டியில் வென்றாலும், அதிக ரன்ரேட் அடிப்படையில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதன்படி 44 ஒவர்களுக்குள் 278 ரன்கள் இலக்கை எட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து பாஸ் டி லீட் அதிரடி சதத்தால்(123 ரன்கள்) 42.5 ஒவர்களிலேயே எளிதாக வெற்றி பெற்று உலகக்கோப்பையில் விளையாடும் இடத்தை உறுதி செய்தது. மேலும் இந்த போட்டியில் பேட்டிங்கில் சதம் மட்டுமின்றி பந்துவீச்சிலும் 5 விக்கெட் எடுத்து அணிக்கு மிகப்பெரும் பங்காற்றிய பாஸ் டி லீட் ஆட்டநாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.