தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது. இதற்கான கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரும் நோக்கில், முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து இருந்தார். அதாவது தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியான 500 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவித்தார். கலைஞரின் நூற்றான்டு பிறந்தநாளை முன்னிட்டு மதுவிலக்கு துவக்கம் பெரும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, மூடப்பட இருக்கும் தகுதிவாய்ந்த டாஸ்மாக் கடைகளை எவ்வாறு அடையாளம் காணப்படும் என்று பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதன் படி, 50 மீட்டர் தொலைவில் அருகருகே உள்ளே கடைகள், வருமானம் குறைவாக உள்ள கடைகள், வழிபாடு தளங்கள், கல்வி நிலையங்கள் அருகே உள்ள கடைகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் கடைகள் என கணக்கெடுத்து அதில் 500 கடைகளை மூட டாஸ்மாக் ஆயத்தீர்வை முடிவு எடுத்துள்ளது.