காசா பகுதியில் இருந்து நடத்தப்பட்ட தொடர் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பார்க்கும் போது இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து பல ஆண்டுகளாக காசா பகுதியில் பிரச்சனை நிலவி வருகிறது. இதனை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்த சர்ச்சைக்குரிய காசா பகுதியை தங்களுடையது என இஸ்ரேல் உரிமை கொண்டாடி வருகிறது. இருப்பினும், அது தங்களுடையது என்றும் தங்கள் இறையாண்மையில் இஸ்ரேல் தலையிடுவதாக பாலஸ்தீன் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த மோதல் தொடரும் நிலையில், பாலஸ்தீனை சேர்ந்த ஹமாஸ் படையை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இதற்கிடையே, இன்று இந்த காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. காலை 6 மணி முதலே ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி வந்துள்ளது. இந்த தொடர் ஏவுகணை தாக்குதலையடுத்து, இஸ்ரேலில் போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மணி நேரத்தில் காசா பகுதியில் இருந்து 5,000 ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதாக கூறப்படுகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நாட்டில் ஊடுருவியதாகவும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய தினம் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படை தான் முதலில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை அவர்களே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள். அதிகாலையில் தொடங்கிய இந்த தாக்குதல் அடுத்த சில மணி நேரத்திற்கு நீடித்துள்ளது. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பலரும் இந்த குண்டு வெடிப்பு சத்தம் கேட்டே பயந்து ஓடியுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில் இப்போது போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதிலடி தரும் நடவடிக்கைகளிலும் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இந்தத் தாக்குதல் நடந்தவுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஹமாஸ் படைகள் இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்றும் இதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இஸ்ரேலை சேர்ந்த முதியவர் ஒருவர் இதில் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.