வீட்டிற்கு செல்ல பாதை இல்லாத காரணத்தால், பாதை அமைத்துத் தரும் வரை 5ம் வகுப்பு மாணவன் தான் படிக்கும் அரசுப் பள்ளியின் வாயிலில் குடும்பத்தினருடன் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது வீட்டிற்கு செல்ல பாதை இல்லாத காரணத்தால் அன்னதானக் காவேரி பிரதான வாய்க்கால் வழியாக செல்ல வேண்டிய சூழலில் இவரது குடும்பத்தினர் உள்ளனர்.
தங்கள் குடும்பத்தினருக்கு வீட்டிற்கு செல்ல பாதை அமைத்து தரக் கோரி ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்த வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான மெய்யநாதனிடம் எட்டு மாதங்கள் முன்னர் முறையிட்டார்.
இது தொடர்பாக பொதுப்பணித்துறையின் அரசு புறம்போக்கு இடத்தில் பாதை அமைத்துத் தருமாறு ஆலங்குடி வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டும் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டி வந்தார்.
இந்த நிலையில், அதிகாரிகள் பாதை அமைத்துத் தரும் வரை தனது மகன் படிக்கும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் வாயிலில் மாணவன், அவரது தாய் தந்தை மற்றும் தாத்தா பாட்டியுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினருடன் மாமன்னன் என்கிற நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தக் கூடாது என்று போதையில் ஆலங்குடி- கீரமங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனடியாக காவல்துறையினர் பேருந்துகள் மற்றும் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பி வைத்தனர் இந்த சம்பவத்தால் சேந்தன்குடி பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரையிலும் பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.