காமன்வெல்த் போட்டியில் பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் சுதிர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை சார்ந்த 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் சுதிர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 134.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனையாகும். இந்தப் போட்டி முழுவதுமே மற்ற வீரர்களை விட சுதிர் முன்னணியில் இருந்து வந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
இதற்கிடையே, காமன்வெல்த் வரலாற்றில் நீளம் தாண்டுதலில் வரலாறு படைத்துள்ளார் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர். காமன்வெல்த் வரலாற்றில் ஆண்கள் நீளம் தாண்டுதலில் கிடைக்கும் முதல் வெள்ளி பதக்கம் இது என்பதால் அவரின் சாதனை கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. அதே போன்று காமன்வெல்த் போட்டிகளில், குத்துச்சண்டையில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்து, பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார் அமித் பங்கால். காமன்வெல்த் போட்டிகளில், பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில், அரையிறுதிக்குள் நுழைந்து பவினா பட்டேல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.