தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாளில் இரவு 10 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் மதுபான விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ஒரு ரகசிய தகவல்களை கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விற்பனை செய்யும் இடத்திற்கு சென்று பார்த்த போது அவர்கள் தப்பி ஓடி இருந்தனர்.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் இது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்ட போது அவர்கள் குழுவாக வாக்கி டாக்கிகள் மூலமாக காவல்துறையினரின் வருகை குறித்த தகவல் அறிந்து மதுபானத்தை விற்பனை செய்து தப்பி ஓடி விட்டதும் தெரியவந்தது.
அதோடு டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையிலான காவல்துறையினர் நேற்று ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினரின் நடமாட்டத்தை அங்கிருந்த ஒரு நபர் சிறுவர்கள் விளையாடும் வாக்கி டாக்கி மூலமாக அருகில் இருந்தவருக்கு தகவல் வழங்குவதும் இதனைத் தொடர்ந்து, அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொண்டதும் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. மேலும் காவல்துறையினர் அவர்களை கண்காணித்து அவர்களை பின்துடர்ந்து சென்ற போது, திருப்பனந்தாள் மன்னியாற்றின் அருகில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பிறகு அந்தப் பகுதியில் இருந்த சச்சுவாணன் (26) கணேசன்(46) ஆறுமுகம்( 30), சேகர்(63), சசிகுமார் (40), ரவி (55) உள்ளிட்ட 6️ பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 3 வாக்கி டாக்கிகள், 2️ இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.