பிபிசி ஊடக அலுவலகங்களில் 60 மணிநேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். கடந்த பிப்.14 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தொடங்கிய சோதனை, கிட்டத்தட்ட 3 நாட்களாக (60 மணிநேரம்) நடைபெற்றது. இதில் பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் 2 ஆவணப்படங்கள் சமீபத்தில் வெளியிட்டது. இதனை மத்திய அரசு தடை செய்திருந்த நிலையில், தடையை மீறி சில இடங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்த ஆவணப்படம் வெளியானதை அடுத்து தான் பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 60 மணி நேர சோதனையில் பிபிசியின் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.