இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலிய இடையேயான 2வது போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களுக்கு 5விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் எடுத்தது. இதில் நிதானமாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதங்களை பதிவு செய்தனர். பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் 105 ரன்களுக்கும், சுப்மன் கில் 104 ரன்களுக்கும் அவுட் ஆகினர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் 39, கே.எல்.ராகுல் 52 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். சூரியகுமார் யாதவ் 72 ரன்களும், ஜடேஜா 13 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்காமல் இருந்தனர்.
குறிப்பாக 200 ஸ்ட்ரைக் ரேட்டில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் இன்று இருந்தது. அதுவும் கேமரன் கிரீன் வீசிய 43 வது ஓவரில் 4 சிக்ஸர்களை தொடர்ந்து அடித்து ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டினார். சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 6 சிக்ஸர், 6 ஃபோர்களுடன் 72 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.