அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளார்..
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக பொருளாளர் தாக்கல் செய்ய வேண்டிய வரவு, செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். பொதுக்குழு முடிவில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை தான் கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட, வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வங்கிகளுக்கு கடிதம் எழுதி இருந்தார்.. அதிமுக வங்கி கணக்குகளை பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் கையாள அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், கடிதத்துடன் இணைக்கப்பட்ட ஆதாரங்களை சரிபார்த்த பின், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை வங்கிகள் ஏற்றன..
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும் வரை அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளார்.. தேர்தல் ஆணையத்தின் படி தற்போது வரை தாம் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றும், கடந்த 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் செல்லாது என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்..
மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நிலுவைஐயில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. சட்ட விதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக இபிஎஸ் நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்கும் வரை ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை தர வேண்டும் என்றும் அதிமுகவின் 7 வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. மேலும் அதிமுக வங்கிக் கணக்கு தொடர்பான பண பரிவர்த்தனைக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..