நடிகை பலாத்கார வழக்கில் சீமானை கைது செய்ய வலியுறுத்தி சென்னை மாநகரத்தின் பல பகுதிகளில் பெரியாரிஸ்டுகள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில், விஜயலட்சுமி புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், 12 வாரங்களில் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, கடந்த மாதம் 27ஆம் தேதி சீமான் இல்லத்துக்குச் சென்ற வளசரவாக்கம் போலீஸார், சீமான் வீட்டில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் ஒட்டினர். அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகி சம்மனை கிழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, பெரியார் விவகாரத்தில் ஏற்கனவே சீமானுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரியார் இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை பலாத்கார வழக்கில் சீமானை கைது செய்ய வலியுறுத்தி சென்னை மாநகரத்தின் பல பகுதிகளில் பெரியாரிஸ்டுகள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த சுவரொட்டியில், தமிழ்நாடு அரசே..! காவல்துறையே..! பாலியல் குற்றவாளி சீமானை தப்பவிடாதே..! உதவி கேட்டு வந்த பெண்ணை ஏமாற்றி, வன்புணர்ந்து 7 முறை கருக்கலைப்பு செய்த பாலியல் குற்றவாளி சீமானை கைது செய்..! சிறையிலடை..! என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.