மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 7 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமியின் தாய் இறந்துவிட்டார், மேலும் சிறுமியின் தந்தை மதுவுக்கு அடிமையானவர். இதனால், சிறுமி வந்தனா காலே என்ற அவரது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி, வந்தனா காலே அந்த சிறுமியிடம் 50 ரூபாய் கொடுத்து கோழிக்கறி வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
ஆனால், அந்த சிறுமிக்கு சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமி வீட்டிற்க்கு திரும்பி வரும் போது 10 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கி சாப்பிட்டுள்ளார். இது குறித்து வந்தனாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வந்தனா, சிறுமியின் கை, கால்களை கயிற்றால் கட்டி, வாயில் துணியை வைத்து திணித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல், கரண்டியை நெருப்பில் வைத்து சூடாக்கி, அதை சிறுமியின் பிறப்புறுப்பிலும் தொடையிலும் சூடு வைத்துள்ளார். வலி தாங்க முடியாமல் சிறுமி கதறி துடித்துள்ளார். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமி நடக்க கூட முடியாமல் தவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் உறவினர் ஒருவருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர், சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வந்தனா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி வந்தனா மும்பை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதபதி ஷ்வ்குமார் டிகே, குற்றம்சாட்டப்பட்ட பெண், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். இதனால் அவரை மேலும் காவலில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி வந்தனாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.