தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது..
தமிழகம் முழுவதும் உள்ள போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.. இதன் தொடர்ச்சியாக போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளரும் அறிவுறுத்தி இருந்தார்.. அதன் படி இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.. மேலும் தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல் சிகிச்சை அளிப்பதை தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது..
இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலி மருத்துவர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டது.. இந்த குழு தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.. அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் 12, தஞ்சையில் 10, திருவள்ளூரில் 8, சேலத்தில் 6 பேர், புதுக்கோட்டை, தேனி மாவட்டங்களில் தலா 5 பேர், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 4 பேர், பெரம்பலூர், நாகை, விழுப்புரம் மாவட்டங்களில் தலா 3 பேர், தருமபுரி, சிவகங்கை, மதுரை, கரூர் மாவட்டங்கள் தலா ஒருவரும் என 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. போலி மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது..