தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி காலனி பகுதியில் வசித்து வந்தவர் ராமர் மனைவி பேச்சியம்மாள் (75). இவர் தனது மகள் மகாலட்சுமியுடன் வசித்து வந்தார். மகள் மகாலட்சுமி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல மகாலட்சுமி வேலைக்கு சென்று விட்டு இரவு சுமார் 7.30 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பேச்சியம்மாளை அதே பகுதியைச் சேர்ந்த காட்டு ராமன் மகன் அமாவாசை (45) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், அமாவாசையிடம் இருந்து தனது தாய் பேச்சியம்மாளை காப்பாற்றுவதற்காக சென்று அம்மாவாசையை பிடித்து இழுத்த போது அமாவாசை மகாலட்சுமியை உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார். பின்னர், மகாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
தப்பிச் செல்ல முயன்ற அமாவாசையை மடக்கி பிடித்து தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அமாவாசை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மூதாட்டி பேச்சியம்மாள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் பலத்த காயம் இருப்பதால் உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.