மிசோரமில் கல்குவாரி விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு மிசோரமின் ஹனாதியால் மாவட்டத்தில் மவ்தார் பகுதியில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் நேற்று 13 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென குவாரியில் கற்கள் சரிந்து விழுந்துள்ளன. இதில், ஒரு தொழிலாளி தப்பி ஓடிய நிலையில், 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இவர்களுடன், இன்று காலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு, இதுவரை விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை மீட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து, காணாமல் போன 4 தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.