தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணைக்கட்டு உள்ளது. இங்கிருந்து பிற இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், இடதுகரை கால்வாய் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள டோமலாபெண்டா பகுதியில் குகை கால்வாயில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கால்வாய் குகையின் மேல்புறம் இடிந்து விழுந்தது.
சுமார் 3 மீட்டர் தொலைவுக்கு இடிந்து விழுந்ததால், குகையின் ஒருபகுதியில் இருந்த தொழிலாளர்கள் பதறியடித்து வெளியே ஓடிவந்தனர். சுரங்கப்பாதை பணிக்காக இருபுறமும் துளையிடும் இயந்திரங்கள் மூலம் பணிகள் நடந்து வந்தன. ஒரு பக்கத்தில் 20 கிமீட்டரும், மறுபுறம் 14 கிமீட்டர் நீளத்திற்கும் தோண்டப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 60 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், சுரங்கத்தின் இடிபாடுகள் விழுந்ததில், 52 பேர் பாதுகாப்பாக வெளியேறினர். இதில் ஜெய் பிரகாஷ், மனோஜ் குமார், ஸ்ரீநிவாஸ், சந்தீப் சாஹு, ஜாதக்ஸ், சந்தோஷ் சாஹு, அனுஜ் சாஹு மற்றும் ராபின்ஸ் இந்தியா நிறுவனத்தின் எந்திர ஆப்ரேட்டர்களான சன்னி சிங், குர்ப்ரீத் சிங் ஆகிய 8 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவதற்காக சுரங்கத்திற்குள் மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மண் மேடுகள் மற்றும் கான்கிரீட் குப்பைகளை அகற்றி வருகின்றனர். உள்ளே சேறும் சகதியாக இருப்பதால், தொழிலாளர்கள் 8 பேரும் அதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர் ஒருவரின் கை மேலே தெரிந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்திய ராணுவத்தின் ஒரு குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுடன் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மீட்புப் பணியின் முதற்கட்டமாக உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சுரங்கப் பாதையில் பெரிய கல்பாறைகள் சரிந்து மூடியுள்ளதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சுரங்கத்திற்கு சிக்கியிருக்கும் தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மாநில அமைச்சர் உத்தம குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.