மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புது ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, 8-வது ஊதியக்குழுவை வரும் ஜனவரி 1, 2024ஆம் ஆண்டு முதல் நிறுவ வேண்டும் என்று ரயில்வே மூத்தக் குடிமக்கள் நலச்சங்கம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தி உள்ளனர்.
அதோடு தற்போது 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000-க்கு பதில் ரூபாய் ரூ.18,000 நிர்ணயித்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன் கடந்த 3 மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தை விட 50% (அ) அதற்கு அதிகமாக இருக்கும்போது எதிர்கால ஊதிய திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் ரயில்வே மூத்தக்குடிமக்கள் நல சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2024ஆம் ஆண்டு முதல் ஊதியம், கொடுப்பணைவுகள் மற்றும் ஓய்வூதியம் போன்றவை அதற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் நல சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.