குனோ தேசிய பூங்காவில் தற்போது வரை 9 சீட்டா சிறுத்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது குறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்தின் மீது சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் குனோ பூங்காவுக்கு தென்னாப்பிரிக்காவிலிருந்து நிபுணர்கள் குழு வந்து ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவுகள் திருப்திகரமாக இருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவிலிருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. குனோ தேசிய பூங்காவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திறந்து வைத்தார்.
இந்நிலையில் சிறுத்தை ஆரோக்யமாக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு சிறுத்தைகளாக உயிரிழக்க தொடங்கின. அதைத்தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் சிறுத்தைகள் உயிரிழந்தன. அடுத்தடுத்து மூன்று குட்டிகள், பின்னர் மூன்று சிறுத்தைகள் என மொத்தம் 9 சிறுத்தைகள் உயிரிழந்தன.
சிறுத்தைகளை பராமரிப்பவர்களுக்கு போதுமான பயிற்சி கொடுக்கப்படவில்லை என்று நிபுணர்கள் விமர்சித்திருந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், “சிறுத்தைகளின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலர்தான் உயிரிழப்புக்கு காரணம். அதுதான் பலமான காயத்தை சிறுத்தைகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. பூங்காவில் இருப்பவர்கள் எங்களை போன்ற நிபுணர்களை நம்ப வேண்டும். தற்போது குனா பூங்காவில் சிறுத்தையை பார்த்துக்கொள்பவர்களுக்கு போதுமான பயிற்சி இல்லை. அவர்கள் எங்களின் அபிப்ராயங்களை புறக்கணிக்கின்றனர். இந்த திட்டதை மேலோட்டமாக செயல்படுத்துகின்றனர்” என்று தென் ஆப்பிரிக்க விலங்கு நல சிறப்பு மருத்துவர் ஆட்ரியன் டோர்டிஃப் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக சிறுத்தைகள் உயிரிழப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதாகவும், சந்தேகம் இருப்பதாகவும் எதிர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதனை மறுத்த நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கேள்வியெழுப்ப எந்த காரணமும் இல்லை” என்று கூறியுள்ளது.