நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், தற்போது பர்கர் சாப்பிட்ட 9 பேருக்கு வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் பழைய நகராட்சி அலுவலகம் அருகே ‘ஐ வின்ஸ்’ என்ற தனியார் ஹோட்டல் ஒன்றில் ஷவர்மாவை சாப்பிட்ட கலையரசி (14) என்ற பள்ளி மாணவி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அதே ஹோட்டலில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட 11 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 43 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், ஹோட்டல் உரிமையாளர் நவீன்குமார், சமையலர்கள் இருவர் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா, கிரில் சிக்கன் விற்பனை செய்யவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், ஃபாஸ்ட் புட் உணவகங்கள், மீன் இறைச்சிக் கடைகள், கறிக்கோழிக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு நடத்தினர். மொத்தம் 140 உணவகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 37 கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
மொத்தம் 82.35 கிலோ உணவுபொருள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இததொடர்பாக 35 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ.35 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த உணவகங்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலர் அருண் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வெறும் ரூ.500இல் ஆரம்பித்து லட்சங்களை சம்பாதிக்கலாம்..!! குழந்தைகளுக்கான இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடை அமைந்துள்ளது. இங்கு பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதே கடையில் சாப்பிட்ட 8 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பர்கர் சாப்பிட்டவர்களில் 18 வயது இளைஞருக்கு உடல்நிலை மோசமடைந்ததால், அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், பர்கர் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.